நற்செய்தி

முழுமனதோடு அன்பு செய். இறைவனையும், மனிதனையும்.

குறு நாடகம் : இடையர்களும் இயேசுவும்

Posted by Stella on April 4, 2008

( மூன்று இடையர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு ஒரு மாலை நேரத்தில் ஓய்வெடுக்கிறார்கள் )

doodan.jpg

இடையன் 1 :- இன்னிக்கு வழக்கத்தை விட அதிகமா குளிரெடுக்கிறது போல இருக்கு இல்லையா ?

இடையன் 2 :- ஆமா.. பனி பெய்யும் மாதம் இல்லையா ? குளிர் எடுக்காவிட்டால் தான் ஆச்சரியம்.

இடையன் 3 :- இந்த ஆடுகளை மேய்க்கும் பணி எவ்வளவு கஷ்டமா இருக்கு. வெயில் காலத்தில எதுவும் தெரியாது. ஆனா பனி கொட்டும் மாதங்களில் ஆடுகளைக் காவல் காப்பது கடினமான செயல் தான்.

இடையன் 1:- தனிமையிலே இருட்டிலே இருக்கிறது கூட கொஞ்சம் பயமா இருக்கு இல்லையா ?

இடையன் 3 :- இன்னிக்கு என்ன உனக்கு புதுசா ஒரு பயம் ? ஏதாவது கனவு கண்டியா என்ன ?
( பேசிக் கொண்டிருக்கும் போது… ஆண்டவரின் தூதர் அவர்கள் முன் தோன்றுகிறார்.. மூவரும் பயத்தால் அலறுகின்றனர். )

angel.jpg

இடையர்கள்:- ஆ… ஐயோ… இதென்ன…

தூதன் :- பயப்படாதீர்கள். உங்களுக்கெல்லாம் ஓர் நற்செய்தி சொல்லவே வந்திருக்கிறேன். நான் கடவுளின் தூதன்.

இடையன் 1:- நற்செய்தியா ? ஆடுகளைக் காக்கும் இடையர்களுக்கு நற்செய்தியா ? என்ன செய்தி ? சொல்லுங்கள். .. சொல்லுங்கள். எங்கள் ஆடுகளெல்லாம் அதிகமாய் பால் தருமா ? இல்லை அதிகமாய் விலை போகுமா ?

தூதன் :- உங்களுக்கு மட்டுமல்ல… இது உலகுக்கே நற்செய்தி. ஆண்டவராகிய மெசியா … உங்களுக்காக தாவீதின் ஊரிலே  பிறந்திருக்கிறார்.

இடையன் 2 :- என்னது ?? பிறந்திருக்கிறாரா ? வந்திருக்கிறார் என்றால் நம்பலாம். பிறந்திருக்கிறார் என்கிறீரே ? என்ன அடையாளம்.

தூதன் :- குழந்தையை துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தியிருக்கக் காண்பீர்கள்… இதுவே அடையாளம்.

இடையன் 3:- நீங்கள் சொல்வதெல்லாம்… மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. பிரமிப்பாகவும் இருக்கிறது.

தூதன் :- ஆம்… வானக தேவன் பூமிக்கு வந்ததைச் சொல்லவே அவர் தூதராகிய என்னை அனுப்பியிருக்கிறார். இவர் மனித உருவில் வந்த மனுமகன். பூமியின் பிழையகற்ற வந்த புனித மழை. பாவங்களையெல்லாம் நம்மிடமிருந்து பிய்த்தெடுத்துப் புதைக்க வந்த பிதாவின் மகன்.

இடையன் 1 :- அப்படியானால் நாங்கள் போய் தரிசிக்கலாமா தலைவனை ?

தூதன் :- செல்லுங்கள் எனச் சொல்லவே நான் உங்களைச் சந்தித்தேன் 
( என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வானக தூதர்கள் ஒரு கூட்டமாய் வந்து அந்த தூதரோடு சேர்ந்து கொள்கிறார்கள் )

தூதர்கள் :- உன்னதத்திலே கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக.. பூலோகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக.
( என்று பாடிய பின் தூதர்களின் கூட்டம் விண்ணகம் நோக்கிச் செல்கின்றனர் )

இடையன் 1 :- வாருங்கள்… நாமும் பெத்லேகேம் போய் பாலனைச் சந்திப்போம்.

இடையன் 2 :- ஆமாம்… வாருங்கள்.. இறைவனின் அழைப்பையா இடையர்கள் நிராகரிப்பது ?. நாடுகளின் தலைவனாய் வந்தவரை ஆடுகளின் மேய்ப்பர்கள் நாம் தரிசிப்பது ஒரு தெய்வீக வரமல்லவா ?

இடையன் 3 :- ஆம்… தூதரைத் பார்த்த திகைப்பே இன்னும் முடியவில்லை. ஆண்டவனைப் பார்த்தால் இதயம் எப்படித் தாங்குமோ ?

( இடையர்கள் மூவரும் பேசிக்கொண்டே நடக்கிறார்கள் )

இடையர்கள் தூதர் சொன்ன இடத்திற்கு வருகிறார்கள். அங்கே தொழுவத்தில் மரியாளும், யோசேப்புவும் … குழந்தை கொட்டிலில் துணிகள் சுற்றப்பட்டு… கிடத்தப் பட்டிருக்கிறார்

யோசேப்பு :- வாருங்கள்… உங்களுக்கு என்ன வேண்டும் ? எங்கிருந்து வருகிறீர்கள் ?

இடையர்கள் :- ஆண்டவரைச் சந்திக்க ஆவலாய் வந்திருக்கும் ஆட்டிடையர்கள் நாங்கள். தூதர் ஒருவர் தோன்றி… சென்று பாருங்கள்.. என்று அனுப்பினார்.

(மரியா, யோசேப்பு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள்  ஆச்சரியத்தோடு. )

idayar.jpg

யோசேப்பு :- வாருங்கள்.. இதோ இவர் தான் கன்னியிடம் அவதரித்த தன்னிகரற்றவர்.

மரியாள் (மனசுக்குள் ) :- ஆண்டவரின் சித்தத்தின் படியே எல்லாம் நடக்கிறது மனுமகனை மண்ணிற்கு அழைத்துவர என்னைத் தேர்ந்தெடுத்த ஆண்டவருக்கு நன்றி.
( இடையர்கள் முழங்கால் படியிட்டு ஆண்டவரை வணங்குகிறார்கள். )

இடையன் 1 :- இவர் தான் மீட்பர். இவரிலிருந்தே இனி உலகம் மீட்பை உணரும்.

இடையன் 2 :- ஆம். இவர் வானத்தின் மகன், மண்ணில் வந்திருக்கும் வார்த்தையான தேவனின் குழந்தை வடிவம்.

இடையன் 3 :- மீட்க வந்த மீட்பரே உம்மை வணங்குகிறேன்.

( இடையர்கள் மீண்டும் முழங்கால் படியிட்டு ஆண்டவரை  வணங்குகிறார்கள். )

இடையர்கள் :- நாங்கள் கிளம்புகிறோம். உலகின் கடவுளைக் காணும் வாய்ப்பை எங்கள் கண்களுக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றி.

0

இடையன் 1 :- பார்த்தாயா ? அந்த பாலனின் முகத்திலேயே தெரிகிறது ஓர் தெய்வீக
ஒளி. இவரே உலகின் இருளகற்றும் ஒளி. அதில் சந்தேகமே இல்லை.

இடையன் 2 :- ஆம். ஆடிடைக் குடிலில் ஆண்டவன் அவதரிப்பு ! ஆயர்கள் நமக்கு முதல் அறிவிப்பு இதெல்லாம் பெரும் வியப்பு.. . இல்லையா ?

இடையன் 3 :- ஆமாம்.. இடையரைத் தேடிவந்த இறைவன் வாழி…

( இடையர்கள் மகிழ்ச்சியோடு பாடுகிறார்கள் )

இடையன் 1.

வாழிய வாழிய இறைமகனே ..
மண்ணில் வந்த விண்ணவனே… உம்
திருவடி தொழுதே சரணம் சொன்னோம் ..
நிறையருள் தருவாய் திருமகனே.
 

இடையன் 2

வெளிச்ச நாயகன் பூமிக்கு வந்தார்
விளக்கைத் துடைத்து வையுங்கள்.
அழிக்கும் பாவத்தை அழிக்க வந்தார்
இதயம் திறந்து வையுங்கள்.

இடையன் 3


பனியின் மடியில் கொட்டில் இடையில்
கருணைக் கதிரவன் தெரிகின்றார்,
சத்திரக் கதவுகள் சாத்திக் கொள்ள
சத்திய தேவன் சிரிக்கின்றார்.

இடையன் 1.

மாளிகை வாசியை தேடாமல் நீர்
இடையனைத் தேடி வந்தீரே,
இதயத்தை உம்பால் திறந்தே வைத்தொம்
இடர்களைத் தீர்ப்பீர் தூயவரே.

இடையர்கள் மூவரும் :-

வாழிய வாழிய இறைமகனே – நீர்
வாழிய வாழிய தலைமகனே

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>