புத்தம் புதிய இறை பாடல்; இசை சேர்த்தால் நிறை பாடல்.
Posted by Stella on April 21, 2008
(Michelangelo Buonarroti – 1506 )
மண்ணில் வந்த விண்ணின் மகனே
உன்னை வாழ்த்தும் என் மனமே
வார்த்தை வந்து வாழ்க்கை தந்த
வரத்தால் வாழும் உயிர் தினமே.
உள்ளே வா என் ஆதவனே – என்
உள்ளம் உந்தன் ஆசனமே
கள்ளம் கொண்ட மனதுக்கும் – ஒளி
வெள்ளம் தந்த மன்னவனே
ஃ
ஜனனம் கொண்டதால் மரணம் காணும்
நிலைதான் மானிட வாழ்வென்பேன்
மரணம் காணவே ஜனனம் கொண்ட
உந்தன் அன்பை என்னென்பேன் ?
மாளிகை தேடி பாதம் அலையும்
மானிடர் வாழ்வை வீணென்பேன்
தொழுவம் போதும் என்று பிறந்த
உந்தன் வாழ்வை என்னென்பேன் ?
ஃ
தன்னலப் பாவம் தலையில் சுமந்து
ஓடும் வாழ்க்கை காண்கின்றேன்
என்நலம் காண சிலுவை சுமந்து
வாடிய உம்மால் வாழ்கின்றேன்.
உலகக் கவலை தோளில் தூக்கி
அலையும் நிலையே மனிதநிலை
உலகை உந்தன் ஒற்றை உயிரால்
நிலைபெற செய்தது தேவநிலை.
