அடுத்தவர் நம்பிக்கை நம்மைக் குணமாக்குமா ?
Posted by Stella on May 14, 2008
நமக்கு ஏதாவது தேவையிருந்தால் நாம் இறைவனில் நம்பிக்கை உடையவர்களாக இருக்க வேண்டுமா அல்லது பிறருடைய நம்பிக்கை நம்முடைய தேவைகளை நிறைவேற்றுமா ? எனும் கேள்வி பல வேளைகளில் நம்மை அலைக்கழிப்பதுண்டு.
By Hubrecht van Eyck (1370-1426)
உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று, நம்பு அப்போது இறைவனின் மாட்சியைக் காண்பாய், நம்பிக்கையுடன் கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்றெல்லாம் இயேசு விவிலியம் வாயிலாக நம்மிடம் பல இடங்களில் சொல்கிறார்.
எனில், நம்முடைய நம்பிக்கை மட்டும் தானா ? ஒருவேளை நம்பிக்கையே இல்லாத ஒருவன் இறைவனின் வியத்தகு செயல்களின் வாசனையை நுகர முடியாதா ?
இந்தக் கேள்விக்கு விடையை விவிலியம் ஒரு இடத்தில் மிகவும் அழகாகத் தெளிவு படுத்துகிறது.
திமிர்வாதக் காரன் ஒருவனை இயேசுவின் முன்னால் கட்டிலோடு தூக்கி வருகின்றனர் நான்குபேர். அவர்கள் இயேசுவின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள். இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து போதித்துக் கொண்டிருக்கிறார். கூட்டம் மிக அதிகம். யாரும் உள் நுழைய முடியாது.
தூக்கி வந்தவர்கள் யோசித்தனர். வீட்டின் கூரை மீது ஏறி கூரையைப் பிரித்து அவனை கட்டிலோடு இயேசுவின் முன்னால் இறக்கினார்கள்.
“இயேசு அந்த நோயாளியைக் கட்டிலோடு தூக்கி வந்த அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு” அவனைச் சுகமாக்கினார் !!!
இயேசு நமது நம்பிக்கை வலுவடைய வேண்டியதன் தேவையை அழுத்தம் திருத்தமாய் சொல்லும் அதே வேளையில் நமக்காய் பிறர் கொண்டிருக்கும் நம்பிக்கை கூட நம்மைக் காப்பாற்றும் என்பதை இந்த நிகழ்வின் மூலமாக நமக்கு விளக்குகிறார்.
நம்பிக்கை இல்லாமல் செய்யும் எந்த செயலுமே முழுமையான பலனைத் தருவதில்லை. நாம் பல வேளைகளில் பல இடங்களில் நம்பிக்கை வைக்கிறோம், பல வேளைகளில் நம்முடைய நம்பிக்கைகள் போலி பைனான்சியர்களைப் போல சிதைக்கப்படுகின்றன.
ஆனால் இறைவன் மேல் வைக்கும் நம்பிக்கை எப்போதும் வீணாவதில்லை. இறையில் வைக்கும் நம்பிக்கை என்பது முழுமையாய் சரணடைதலே.
நம்பிக்கை கொள்வோம், நமக்காகவும் பிறருக்காகவும் இறையின் நிறையில் நம்பிக்கை கொள்வோம்.
