நற்செய்தி

முழுமனதோடு அன்பு செய். இறைவனையும், மனிதனையும்.

சீனா : உயிரை உலுக்கிய நிகழ்வுகள்

Posted by Stella on May 28, 2008

உலகையே உலுக்கிய சீனாவின் நில நடுக்கம் மனிதாபிமானக் கரங்களை ஒன்றிணைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் மனித நேயம் மிச்சமிருக்கிறது என்பதை பல நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.


சுமார் 60,000 த்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய இயற்கைச் சீற்றம் நடந்த 24 மணி நேரத்திலேயே உதவும் மனிதாபிமானக் கரங்களால் இரத்த தானம் முழுவீச்சில் நடந்து அனைத்து இரத்த வங்கிகளும் நிரம்பியிருக்கின்றன.

நிறைய குழந்தைகள் வெட்ட வெளியில் பிறந்திருக்கின்றன, உதவிக்கு ஏராளம் மருத்துவர்கள். விசும்பல்களும், அழுகையும், ஆனந்தமும் கலந்த விவரிக்க முடியாத அனுபவம்.

11 ஆயிரம் பேர் விமானம் மூலம் சம்பவ இடத்திற்கு மேலே வந்து 20000 அடி உயரத்திலிருந்து பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் குதித்தனர். இறங்குவதற்கு ஒரு இடம் இருக்குமா என்பதை அறியாமலேயே.

600 படை வீரர்கள் அதிக பழுவை தோளில் சுமந்து 21 மணி நேரம் நடந்து பாதிப்பு இடங்களை வந்தடைந்திருக்கின்றனர்.

ஒவ்வோர் உயிரும் விலை மதிப்பற்றது என்பதை உணர்ந்த மீட்புப் பணியினர், தங்கள் உயிரும் உயர்ந்தது என்பதை உணராமலேயே கடும் பணிகளில் ஈடுபட்டு கண்ணீர் விட வைத்தனர்.

இந்த வீடில்லா ஏழை பிச்சைக்காரர் ஆயிரம் கிலோ மீட்டர்கள் எப்படியோ பயணித்து காலையில் 5 யென் உதவிப் பெட்டியில் போட்டார். பின் வெகு நேரம் கழித்து அவரே வந்து 100 யென் போட்டார்.

ஏற்கனவே போட்டீர்களே … என விசாரித்த போது தன்னிடம் சில்லறையாய் இருந்த பணத்தை வங்கியில் கொடுத்து நோட்டாய் மாற்றிக் கொண்டு வந்ததாய் அவர் சொன்னார்.” “ ஏன் நோட்டாய் ? சில்லறையாய் போட்டால் போதுமே – என்று விசாரித்ததற்கு அவர் சொன்ன பதில் சிலிர்ப்பூட்டுகிறது.

உதவிப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு எண்ண வேண்டியிருக்குமே. அதனால் அவர்களுடைய சிரமத்தைக் குறைக்கவே சில்லறையை நோட்டாய் மாற்றினேன்

 

பெற்றோர் தங்களுடைய இரு கரங்களையும், தோள்களையும் ஒன்றாய் கோர்த்து ஒரு வளைவு உருவாக்கி அதன் கீழே குழந்தையைப் பாதுகாப்பாய் நிறுத்தி குழந்தையின் மீது இடிபாடுகள் விழாமல் காத்தனர். இரண்டு நாட்கள் இடிபாடுகளுக்கிடையில் இந்த குழந்தை உயிருடன் இருந்தது. பெற்றோரின் உறைந்து போன சடலங்களுக்குக் கீழே.

உடைந்து போன கையுடன் 24 மணி நேர போராட்டத்துக்குப் பின் வந்த இந்த சிறுவன் உதவியாளர்களைப் பார்த்து சல்யூட் செய்தான். சிரித்தான். உதவியாளர்களின் விழிகளில் நீர்.

Yuan Wentin எனும் இந்த 26 வயது ஆசிரியை மூன்றாவது மாடியிலிருந்த வகுப்பறையிலிருந்து பெரும்பாலான மாணவர்களைக் காப்பாற்றினார். கடைசியில் கூரை இடிந்து விழுந்தது. ஓடிச் சென்று கூரையை முதுகில் தாங்கி தனக்குக் கீழே சிறிய பாதை உண்டாக்கி மிச்சமிருந்த மாணவர்களையும் காப்பாற்றி முடித்தார். உயிரை விட்டார்.


இடிபாடுகளுக்கிடையே 24 மணி நேரத்துக்குப் பின் இந்த குழந்தை சிறு கீறல் கூட இல்லாமல் காப்பாற்றப்பட்டது. காரணம் குனிந்து வளைந்த நிலையில் குழந்தையை கீழே கிடத்தி பாலூட்டிய நிலையில் இருந்த தாய் ! தாய் உயிரிழந்தார். அவருடைய மடியிலிருந்த கைப்பேசியில் “ குழந்தாய்.. நீ பிழைத்துக் கொண்டால் அம்மா உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நினைவில் கொள்” எனும் வாசகம் !

 

Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>