படிக்க விரும்புவோர் படிக்கலாம் !
Posted by Stella on August 6, 2008
ஒருமுறை இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது குழந்தைகள் சிலர் அவருடைய மடியில் சென்று அமர்வதும் அவருக்கு முன்னால் விளையாடுவதும் என உற்சாகமாய் இருந்தனர். இயேசுவின் சீடர்கள் அந்தக் குழந்தைகளை அதட்டினர். இயேசுவும் அதட்டினார். குழந்தைகளை அல்ல ! குழந்தைகளை அதட்டிய சீடர்களை !!
நீங்களும் குழந்தைகளைப் போல மாறாவிடில் விண்ணரசில் நுழைய முடியாது ! என்றார் இயேசு.
குழந்தைகளாய் மாறுவது என்றால் என்ன ?
1. குழந்தை மனம் மன்னிக்கும் மனம். வலிக்க வலிக்க ஒரு அடி கொடுத்தால் கூட சிறிது நேரத்தில் அனைத்தையும் மறந்துவிட்டு ஓடி வந்து கட்டிக் கொள்வது தான் குழந்தைகளின் மனம். அந்த மனம் நமக்கு இருக்கிறதா ? இல்லை கடந்த வாரம், கடந்த மாதம், கடந்த ஆண்டு அல்லது நான்கு தலைமுறைக்கு முன்னால் நிகழ்ந்த ஏதோ ஒரு செயலினால் இன்னும் பகைமை பாராட்டுகிறோமா ?
குழந்தையைப் போல மன்னிக்காவிடில் நீங்கள் விண்ணரசுக்கு உரியவர்கள் அல்ல !
2. குழந்தை மனம் எப்போதும் தந்தையைத் தேடும். சிறு சிறு செயலைச் செய்யவும், உதவியைப் பெறவும், நடந்ததைச் சொல்லவும் எப்போதும் பெற்றோரைத் தேடும் குழந்தைகள். இயேசு நம்மை அவருடைய தந்தை என்கிறார். நம்மை குழந்தைகளாக ஏற்றுக் கொள்கிறார். நாம் அனைத்துக்காகவும் அவரிடம் சென்று உரையாடவேண்டுமென விரும்புகிறார். நாம் எப்படி இருக்கிறோம் ? தினம் பத்து நிமிடம் கடமைக்காய் ஒரு குடும்ப செபம், அவசரகதியில் சிறு பைபிள் வாசிப்பு, வேறு வழியின்றி ஞாயிற்றுக் கிழமை சில மணி நேரங்கள் ஆலயத்தில் ! இப்படித் தான் இருக்கிறோமா ?
குழந்தைகளைப் போல எப்போதும் இறையைப் பற்றிக் கொள்ளவில்லையேல் நீங்கள் விண்ணரசுக்கு உரியவர்கள் அல்ல.
3. குழந்தை மனம் பணத்தை விரும்பாது. விலையுயர்ந்த பொன்னையோ, வைரத்தையோ கூட அலட்சியமாய் ஒதுக்கித் தள்ளும். விலையுயர்ந்தது குறைந்தது அனைத்தையும் ஒரே விதமாய் பார்க்கும். நாம் எப்படி ? உறவு நேசம் இவற்றுக்காக பணத்தை இழக்கிறோமா ? பணத்துக்காக இவற்றை இழக்கிறோமா ?
பணத்தை பெரிதாய் மதித்து அன்பை உதாசீனப்படுத்தினால் நீங்கள் விண்ணரசுக்கு உரியவர்கள் அல்ல.
4. குழ்ந்தை மனம் பெருமையை விரும்பாது. சபையின் முன்னால் மாலைகள் பெற ஆசிக்காது. அடுத்தவனைக் குறித்து இகழ்வாய் பேசியேனும் தனது பெயரை பறை சாற்ற விரும்பாது.
இத்தகைய குணங்கள் உங்களிடம் இல்லையேல் நீங்கள் விண்ணரசுக்கு உரியவர்கள் அல்ல.
5. குழந்தைகள் முணுமுணுக்காது, எளிதில் திருப்தியடையும், எதன் மீதும் பற்று வைக்காது. கவலைகளைக் கட்டிக் கொண்டு தூங்காது. உள் ஒன்று வைத்து புறமொன்று பேசாது.
நீங்கள் இப்படி இல்லையேல் விண்ணரசுக்குள் நுழைய முடியாது.
இன்றைய உலகம் உங்களை பல்வேறு விதங்களில் திசைமாற்றலாம். ஆனால் இயேசுவின் இந்த ஒரு போதனையைக் கடை பிடித்தால் போதும் நீங்கள் விண்ணரசுக்குள் நுழைவது நிச்சயம்.
அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டியது உலகிலேயே மிகச் சிறந்த போதகரை அல்ல, ஒரு மழலையை. மழலையின் விரல் பிடித்து நீங்கள் நடந்தால் மழலை உங்களை விண்ணகம் சேர்க்கும்.
மழலையிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள் இறைத் தன்மையையும், இறையரசின் சாவியையும்.
